யஸ்வந்த் தவறி விழுந்து உயிரிழந்த சாக்கடை. 
தமிழகம்

திருச்சியில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு; மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க வலியுறுத்தல்

ஜெ.ஞானசேகர்

திருச்சியில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்டது அன்னை சத்யா நகர். இந்தத் தெருவின் பகுதி அளவு 49-வது வார்டிலும், பகுதி அளவு 50-வது வார்டிலும் வருகிறது. இந்தத் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (28). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நளினி, மகன் யஸ்வந்த் (5) மட்டுமின்றி, மேலும் 2 குழந்தைகள் உள்ளனர்.

சிறுவன் யஸ்வந்த்

இந்தநிலையில், நேற்று (டிச. 23) மாலை 4 மணியளவில் விளையாடச் சென்ற யஸ்வந்த், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தில்லைநகர் காவல் நிலையத்தில் நளினி புகார் அளித்தார்.

இதனிடையே, நேற்றிரவு 9 மணியளவில் அந்தத் தெரு நீளத்துக்கும் உள்ள 7 அடிக்கும் அதிக ஆழமான, தற்போது சாக்கடையாக ஓடும், மூடப்படாத மழைநீர் வடிகாலில் யஸ்வந்த் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

தகவலறிந்து தில்லைநகர் போலீஸார் வந்து யஸ்வந்த்தின் உடலை எடுத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக, அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் கூறும்போது, "விபத்து அபாயம், சுகாதாரக்கேடு ஆகிய காரணங்களைக் குறிப்பிட்டு, சாக்கடை ஓரம் தடுப்புக் கம்பிகள் அமைக்கவோ அல்லது சிலாப்புகள் கொண்டு மூடவோ நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை வலியுறுத்தியும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை" என்று குற்றம்சாட்டினர்.

இது குறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமார் கூறுகையில், "மழைநீர் வடிகால்கள் என்று மாநகராட்சி அலுவலர்களால் அழைக்கப்படும் சாக்கடைகள், பெரும்பாலும் சாலை மட்டத்துக்கு இணையாகவும், சில இடங்களில் சாலையைவிட தாழ்வாகவும் உள்ளன. ஆனால், பெரும்பாலான இடங்களில் மூடப்படாமல் திறந்தவெளியாகவே உள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது.

வழக்கறிஞர் எஸ்.ஆர்.கிஷோர்குமார்

இந்தநிலையில், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளையொட்டி அமைந்துள்ள சாக்கடைகளைக்கூட யாரும் தவறி விழுந்து விடாமல் தடுக்க சிலாப்புகள் கொண்டு மூடவோ, தடுப்புக் கம்பிகள் அமைக்கவோ மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதில்லை. அந்தவகையில்தான் சிறுவன் யஸ்வந்த் உயிரிழப்பும் நேரிட்டுள்ளது.

எனவே, சென்னையில் தாம்பரம்-மதுரவாயல் புறவழிச் சாலையை ஒட்டியிருந்த, மூடப்படாத மழைநீர் வடிகாலில் கடந்த டிச.6-ம் தேதி தவறி விழுந்து தாய்-மகள் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதைப்போல், சிறுவன் யஸ்வந்த் உயிரிழந்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக, மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது, "திருச்சி மாநகரில் 850 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் உள்ளது. இதில், இதுவரை 75 கி.மீ. நீள வடிகால் சிலாப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. அபாயம் விளைவிக்கும் வகையில் உள்ள ஆழமான மழைநீர் வடிகால்கள் மூடப்பட்டு வருகின்றன" என்றனர்.

SCROLL FOR NEXT