சீட் பெல்ட் அணிந்தால் மட்டுமே வாகனங்கள் இயங்கவும், அதில் உள்ள ஏபிஎஸ் பிரேக் மற்றும் உயிர்காக்கும் பலூன் வேலை செய்யுமாறும், புதிய தொழில் நுட்பத்தை அனைத்து வாகனங் களிலும் செயல்படுத்துமாறு நாட்டிலுள்ள அனைத்து முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங் களுக்கும் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழும் மொத்த விபத்துகளில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக பட்டியலில் கூறப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை களில் நிகழும் விபத்துகளில் உயிரிழப்புகளுக்கு வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணி யாதது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் ஓட்டுநர் மற்றும் 9 பயணிகள் அல்லது அதற்கும் குறைவாக இருக்கைகள் கொண்ட இலகுரக வாகனங்கள் 100 கிலோமீட்டர் வேகத்திலும், 10 அல்லது அதற்கு மேல் நபர்கள் செல்லும் வசதி யுடைய வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் 80 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும் என மத்திய அரசின் வேகக் கட்டுப்பாடு அமலில் உள்ளது.
பொதுவாக தேசிய நெடுஞ் சாலையில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கும்போது வாகனத் துக்கும், அதில் பயணிப்போருக்கும் அதிக சேதாரம் ஏற்படும். எந்தவித பிடியும் இல்லாமல் பயணம் செய்யும்போது வாகனத்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட வும், கண்ணாடி, கதவுகளில் மோதி தீவிர காயமடையவும், அதனால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
இதனை தவிர்க்க சீட் பெல்ட் அணிவது அவசியமாகிறது. இந்த சீட் பெல்ட் பயணிகளை இருக்கை யில் இருந்து நகர விடாமல் தடுத்து, விபத்தில் அதிக காயமடைவதை தடுக்கிறது. சீட் பெல்ட்டை ஓட்டுநர் உட்பட வாகனத்தில் பயணம் செய்யும் அனைவரும் பயன்படுத்தினால் உயிரிழப்பை பெரும்பாலும் தவிர்க்கலாம்.
இதுதொடர்பாக மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.கே.பாஸ்கரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தற்போது விற்பனைக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் சீட் பெல்ட்டுகள் உள்ளன. சில வாகனங்களில் சீட் பெல்ட் பொருத் தப்படாவிட்டால் பீப் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். அந்த சத்தம் கேட்காமல் இருக்க சீட் பெல்ட்டை உடலுடன் சேர்ந்து அணியாமல், இருக்கையை சுற்றி அணிவித்துவிட்டு வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.
இதனால் சீட் பெல்ட் அணிந்தால் மட்டுமே வாகனம் இயங்கவும், ஏபிஎஸ் பிரேக் மற்றும் ஏர்பலூன் வேலை செய்யுமாறும் புதிய தொழில்நுட்பத்தை வாகனத்தில் செயல்படுத்தினால், வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது தொடர்பாக அனைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தால் விபத்துகளில் உயிரிழப்புகள் நிச்சயம் குறையும். விபத்துகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.