சென்னை கோபாலபுரத்திற்கு தாயைக்காண வந்திருந்த மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். கட்சித் தொடங்குவது குறித்து 3-ம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியபின்னர் அறிவிப்பேன் என தெரிவித்தார்.
திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும், மத்தியில் அமைச்சராகவும் செல்வாக்குடன் இருந்த மு.க.அழகிரி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தது, கட்சித்தலைமையை விமர்சித்தது காரணமாக அப்போதைய தலைவர் கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு இருந்ததால் தலைவராக ஸ்டாலின் தேர்வானார். அதன்பின்னர் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதை அழகிரி குறைத்துக்கொண்டார், பின்னர் கட்சி ஆரம்பிப்பதாக அவ்வப்போது அறிவிப்பு வரும் ஆனால் எதுவும் செய்யவில்லை.
ரஜினியின் நண்பரான அழகிரி கட்சி ஆரம்பித்து ரஜினியுடன் இணைவார், பாஜகவில் இணைவார் என்றெல்லாம் தகவல் வெளியானது. ஆனால் அவர் அனைத்தையும் மறுத்துவந்தார். சமீபத்தில் ரஜினி கட்சி தொடங்குவது குறித்து உறுதியாக அறிவித்த பின்னர் தான் பாஜகவில் இணைய உள்ளதாக வந்த தகவலை மறுத்த அவர், இந்த தேர்தலில் என்னுடைய பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் கட்சி ஆரம்பிப்பதாகவும் ரஜினியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. அழகிரி தரப்பிலும் அதை மறுக்கவில்லை. அழகிரி தனது தாயார் தயாளு அம்மாளை காண அடிக்கடி சென்னைக்கு வருவார். இன்றும் அப்படி சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டிற்கு வந்த மு.க.அழகிரி தனது தாய் தயாளு அம்மாவை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளரிடம் கேள்விக்கு பதிலளித்த மு.க.அழகிரி, “வருகிற தேர்தலில் எனது பங்களிப்பு எப்படி இருக்கும் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளேன் தேர்தலில் வேலை பார்ப்பது, தேர்தலில் நிற்பது, தேர்தலில் வாக்களிப்பது என எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்
வருகிற 3-ம் தேதி எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது ஆதரவாளர்கள் கருத்து படி நடப்பேன். திமுகவில் இருந்து இதுவரை எவ்வித அழைப்பும் வரவில்லை கட்சி தொடங்குவது குறித்து 3-ம் தேதி எனது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முடிவு செய்வேன். ஆதரவாளர்கள் கட்சி ஆரம்பிக்க வலியுறுத்தினால் கண்டிப்பாக ஆரம்பிப்பேன்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்த பின்னர் அவரை சந்திப்பேன், அவரது பிறந்த நாளுக்கு ஆண்டுதோறும் வாழ்த்து கூறுவேன். இந்த முறை சந்திக்க முடியவில்லை அவர் சென்னை வந்தப்பின்னர் நேரில் சந்திப்பேன், திமுகவில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை”. எனத் தெரிவித்தார்.