'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணத்தின் போது, விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரையும் சந்தித்து திமுகவுக்கு வாக்குகள் சேகரித்தும், அதிமுகவை ஓரம் கட்டுவோம் எனவும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மேலும், இந்த சுற்றுப்பயணத்தில் மறைந்த திமுக பிரதிநிதிகளின் இல்லங்களுக்கு சென்று அவர்களது படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது, குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவிப்பது, குடும்பத்தில் உள்ள முதியோர்களிடம் ஆசி பெறுவது என பயணத்தை செய்து வருகிறார்.
இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் இன்று (டிச. 24) தனது சுற்றுப்பயணத்தை உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்கிறார். காலை 10 மணிக்கு அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து பயணத்தை மேற்கொள்கிறார். பின்னர், அரியலூரில் மறைந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் த.ஆறுமுகம் இல்லத்தில் அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்துகிறார். பிறகு தனியார் திருமண மஹாலில் நடைபெறும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து, கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னச்சாமி சிலைக்கு மாலை அணிவித்து, இலந்தைகூடம்-கண்டராதித்தம் கிராமத்தில் உள்ள செம்பியன் மாதேவி பேரேரியை பார்வையிட்டு பொதுமக்களை சந்திக்கிறார்.
தொடர்ந்து 1 மணியளவில் திருமானூரில் மறைந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராமசாமி படத்துக்கு மாலை அணிவித்து, டெல்டா பாசன மற்றும் புள்ளம்பாடி வாய்க்கால் பாசன விவசாயிகளை சந்திக்கிறார். தொடர்ந்து உணவு இடைவேளை.
பின்னர் மதியம் 3 மணிக்கு ஸ்ரீபுரந்தானில் பிரச்சாரத்தை தொடங்கும் உதயநிதி தா.பழூரில் உள்ள அண்ணா, பெரியார் மற்றும் மறைந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.சோ.க.கண்ணன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதனை தொடர்ந்து, தண்டலை, கல்லாத்தூர் கிராம மக்களை சந்திக்கிறார். விளந்தையில் நெசவாளர்களை சந்திக்கும் உதயநிதி, தொடர்ந்து ஆண்டிமடத்தில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவசுப்பிரமணியன் இல்லத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, நினைவுக் கொடி கம்பத்தில் நினைவுக் கொடியை ஏற்றி பயணத்தை நிறைவு செய்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை வரவேற்று மாவட்டத்தில் அவர் செல்லும் வழிகளில் திமுக கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் அணிவகுத்து நிற்கின்றன. நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.