ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த காஞ்சி மாவட்டத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
தமிழ் ஆட்சிமொழி சட்டம் கடந்த 1956-ம்ஆண்டு இயற்றப்பட்டது. இதையொட்டி ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒரு வார காலம் அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் தமிழ்மொழி குறித்து துண்டுப் பிரசுரங்கள், தமிழ்மொழி குறித்த விழிப்புணர்வு மற்றும் வில்லைகள், பதாகைகள் இடம்பெறும்.
இந்நிலையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட இயக்குநர் பவானி தலைமையில் ஒருங்கிணைந்த காஞ்சி மாவட்டத்தில் உள்ள அரசின் நிதி உதவி பெறும் மூத்த தமிழறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழறிஞர்கள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.