தமிழகம்

பாடகர் எஸ்பிபி-க்கு சாக்லேட் அஞ்சலி: புதுச்சேரியில் 339 கிலோ எடையில் சிலை உருவாக்கம்

செ. ஞானபிரகாஷ்

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய பாடல்களில் டூயட் படத்தில் இடம்பெற்ற அஞ்சலி.. அஞ்சலி பாடல் மிகவும் பிரபலமானது.

அந்தப்பாடலில் அவர் புஷ்பாஞ்சலி, பொன்னாஞ்சலி, கீதாஞ்சலி, கவிதாஞ்சலி எனக் கசிந்துருகியிருப்பார். அந்த இனிமையான குரலுக்குச் சொந்தக்காரருக்கு புதுச்சேரியில் 'சாக்லேட் அஞ்சலி' செலுத்தப்பட்டுள்ளது.

ஆம், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியில் 339 கிலோ சாக்லேட்டைக் கொண்டு 5.8 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள சாக்லேட் சிலை ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள தனியார் (சூகா) சாக்லேட் பேக்கரியில் பணிபுரிந்து வரும் சாக்லேட் தயாரிப்பாளர் ராஜேந்திரன், ஆண்டுதோறும் சாக்லேட்டால் செய்யப்படும் பொருட்களில் தன்னுடைய புதிய கலைத் திறமையை வெளிப்படுத்துவார்.

இவ்வகையில் கடந்த காலங்களில் ரஜினிகாந்த் உருவம், ரயில், சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், இந்திய விமானப் படை பைலட் அபிநந்தன் ஆகியோரின் உருவங்களைச் சாக்லேட்டைக் கொண்டு வடிவமைத்தார்.

சாக்லேட் சிலையை வடிவமைத்தது குறித்து ராஜேந்திரன் கூறுகையில், "கிறிஸ்துமஸ் மற்றும் 2020 புத்தாண்டை ஒட்டி மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவரது நினைவைப் போற்றும் வகையிலும் 339 கிலோ சாக்லேட்டைக் கொண்டு 5.8 அடி உயரத்தில் வடிவமைத்துள்ளோம். எஸ்.பி.பி. நிற்பது போல் அமைக்கப்பட்டுள்ள இச்சாக்லேட் சிலையை வடிவமைக்க 161 மணி நேரங்கள் ஆனது.

இச்சிலையை வரும் 3-ம் தேதி வரை பார்க்கலாம். சாக்லேட்டில் புதுமையைக் காட்டவேண்டும் என்ற எண்ணத்தினாலேயே இச்சிலைகளை சாக்லேட்டில் வடிவமைக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT