பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள். 
தமிழகம்

பொள்ளாச்சியில் யானை தந்தங்களை விற்க முயன்ற வனப்பணியாளர்கள் உட்பட 6 பேர் கைது

க.சக்திவேல்

பொள்ளாச்சியில் யானையின் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற வனப்பணியாளர்கள் உட்பட 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-ஆழியாறு சாலையில் நா.மூ.சுங்கம் பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் வளர்ப்பு கடையில் யானையின் தந்ததங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு குழுவிடமிருந்து ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனப்பணியாளர்கள், வன உயிரின குற்ற தடுப்பு குழுவினர் இணைந்து செல்லப்பிராணிகள் வளர்ப்பு கடையில் நேற்று (டிச. 22) இரவு சோதனை மேற்கொண்டனர். அப்போது, 6 கிலோ எடையுள்ள இரண்டு தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளரான வால்பாறையைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பொள்ளாச்சி வனச்சரகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராக பணிபுரியும் சாமியப்பன் (30), துப்புரவு பணியாளரான காத்தவராயன் (40) ஆகியோர், ரோந்துப் பணியின்போது வெடிக்காரன்பள்ளம் வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்த ஆண் யானையின் இரண்டு தந்தங்களை சில வாரங்களுக்கு முன் எடுத்துவந்துள்ளனர். பின்னர், அங்கலக்குறிச்சி ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர்பாஷா (37) என்பவர் மூலம் சாரதி (63), நந்தகுமார் (39) ஆகியோர் உதவியுடன் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சம்மந்தப்பட்ட 6 பேரையும் கைது செய்த வனத்துறையினர், பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT