குன்றத்தூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (டிச. 23) வெளியிட்ட அறிக்கை:
"சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தொழிற்சாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமுடிவாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பராமரிப்புப் பணியில் சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த முருகன், நாகராஜ், ஆனந்த் ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பராமரிப்புப் பணியின் போது மிகப்பெரிய இரும்பு ஏணியை நகர்த்த முயன்ற போது, அந்த ஏணி உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் கம்பிகள் மீது உரசியதால் முருகன், நாகராஜ் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். ஆனந்த் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த தொழிலாளி ஆனந்துக்கு தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும். அவர் வெகு விரைவில் குணமடைவதற்கு விழைகிறேன்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரும் ஏழைத் தொழிலாளிகள். அவர்களின் மறைவால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன. அந்தக் குடும்பங்களின் துயரத்தைப் போக்கும் வகையில் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சமும், காயமடைந்த தொழிலாளி ஆனந்துக்கு ரூ.5 லட்சமும் நிதியுதவி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.