தமிழகம்

அனைத்துத் துறைகளிலும் புரட்சி படைக்கிறது அதிமுக அரசு: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

த.அசோக் குமார்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இன்று நடைபெற்ற அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமியின் மகள் மற்றும் மருமகள் மஞ்சள் நீராட்டு விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார். அவரது கணவர், மாமனாரும் அதிமுகவுக்காக உழைத்து வருகின்றனர்.

எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுக வலிமையோடும், செழிப்போடும், வளமோடும் இருப்பதற்குக் அதிமுகவினர் அத்தனை பேரும் ஒரே குடும்பமாக இருப்பதுதான் காரணம்.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் கல்வித்தரம், கிராமப்புற மக்களின் பொருளாதாரம் உயர்வதற்கு அதிமுக அரசு தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கிறது. அதற்காக ஏராளமான திட்டங்களை அரசு செய்து வருகிறது.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கனவை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் 313 மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இடம் கிடைத்துள்ளது.

ஏழை மாணவர் மருத்துவர் ஆவது சாதாரண விஷயமல்ல. அதையும் சாதித்துக் காட்டியது அதிமுக அரசு.
நீண்ட காலமாக தூர்வாரப்படாத ஏரி, குளங்களை தூர்வார குடி மராமத்து திட்டத்தை கொண்டுவந்து, அனைத்து ஏரி, குளங்கள், குட்டைகள், ஊரணிகள் தூர்வாரப்பட்டு மழை நீர் முழுவதும் சேமிக்கப்பட்டுள்ளது. கல்வியில் புரட்சி, நீர் மேலாண்மையில் புரட்சி, தொழில் புரட்சி என அனைத்துத் துறையிலும் அதிமுக அரசு புரட்சி படைக்கிறது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ, காமராஜ், மாவட்டச் செயலாளர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, கணேசராஜா, சட்டப்பேரவை உறுப்பினர் அ.மனோகரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, முதல்வருக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்.

முதல்வர் பேசிவிட்டு புறப்பட்டுச் சென்ற பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும்” என்றார்.

SCROLL FOR NEXT