திமுக முன்னாள் அமைச்சர்கள் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்குகள் உள்ளன என ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம்.
சென்னை, ராஜ்பவனில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று (டிச. 22) சந்தித்து, அதிமுக அரசு மீது ஊழல் பட்டியலைக் கொடுத்தார்.
இந்நிலையில், இன்று (டிச. 23) விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆளுநரிடம் 98 பக்க ஊழல் பட்டியலை கொடுத்துள்ளார். இது புதிதாக சொல்லப்பட்ட புகார் அல்ல. யாராவது எழுதிக் கொடுப்பதைப் புரிதல் இல்லாமல் கொடுத்துள்ளார். இது குறித்து திமுக வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
முதல்வர் மீதான குற்றச்சாட்டு வழக்கில், ஒப்பந்தத்தில் கலந்துகொண்டவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. அதிமுக எதிரியான திமுக தொடுத்த வழக்கு. அரசியலில் நேர் எதிராக உள்ள கட்சிகள் அரசியலுக்காக வழக்கு தொடுக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பே உள்ளது.
நாங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அனுமதி கேட்டோம், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கொடுத்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த அறிக்கையை படிக்காமலேயே, நீதிபதி தவறாக சிபிஐ-க்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளாரா என கேட்டு, அவ்வழக்குக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வேறு ரூபத்தில் புதிதாக நடந்தது போலக் கொடுத்துள்ளனர்.
பாரத் நெட் டெண்டரில் ரூ.1,950 கோடி ஊழல் என்கிறார்கள். நடக்காத டெண்டரில் எப்படி ஊழல் செய்ய முடியும். அது குளோபல் டெண்டர். அதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
லட்சக்கணக்கில் கொள்ளையடித்தவர்களுக்கு ஆயிரம் கோடி சாதாரணமாக இருக்கலாம். துணை முதல்வர் மகன் கார் வாங்கியது குறித்து புகார் அளித்துள்ளனர். அன்று உதயநிதி ஹம்மர் காரை ஸ்டாலின் வீட்டு முகவரியில் வாங்கி, வரி ஏய்ப்பு செய்ததாக காங்கிரஸ் அரசு காரை பறிமுதல் செய்தது. பின்னர் அவ்வழக்கு மூடிமறைக்கப்பட்டது. என்றைக்கு இருந்தாலும் அவ்வழக்கு தோண்டி எடுக்கப்படும். இது குறித்து அப்போது அதிமுகவில் இருந்த தற்போதைய திமுக மாவட்ட செயலாளர் சேகர்பாபு சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
திமுக எம்எல்ஏ, எம்.பி. என வழக்கு உள்ளவர்கள் பட்டியலைச் சொல்கிறேன். விசாரணையில் உள்ள 368 வழக்குகளில் முன்னாள் திமுக அமைச்சர்கள் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்குகள் உள்ளன. ஐ.பெரியசாமி, மு.க.அழகிரி, துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி, செந்தில்பாலாஜி, தயாநிதிமாறன், நேரு, செங்குட்டுவன், பொங்கலுர் பழனிசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்டாலின் மீது 15 வழக்குகள், அதில் பல அவமதிப்பு வழக்குகள். இப்படி முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன.
நேற்று புகார் கொடுக்கச் சென்றவர்கள் மேல் வழக்குகள் உள்ளன. எல்லோரும் மீதும் வழக்கு தொடுக்கும் ஆர்.எஸ்.பாரதி மீதும் வழக்கு உள்ளது. எம்எல்ஏ, எம்.பி-க்கள் மீது மட்டும் 159 வழக்குகள் உள்ளன. இதில், திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் மீது 100 வழக்குகள். முன்னாள் எம்எல்ஏ, எம்.பி. மீது 75 வழக்குகள் உள்ளன. அதிமுகவினர் மீதும் 10 வழக்குகள் உள்ளன.
திமுகவின் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஊழல் என்ற பெயரை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் கருணாநிதி. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது ஆளுநரை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்ற திமுகவினருக்கு இப்போது ஆளுநர் தேவைப்படுகிறார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த விசாரணை அறிக்கையை பிரிக்கக்கூடாது என்று ஏன் வழக்காடுகிறீர்கள்? குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நாங்கள் பதில் சொல்கிறோம். கருணாநிதி மீது போடப்பட்ட வழக்கு, திமுக ஆட்சியின் போது திரும்ப பெறப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கை, ஆட்சிக்கு வந்து திரும்பப் பெறாமல், நீதிமன்றத்தால் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டு விடுதலை பெற்றார். உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு, அவர் இறந்தபின்பு ரத்து செய்யப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக கருணாநிதி, ஸ்டாலின்மீது போடப்பட்ட வழக்கை ஏன் சந்திக்க மறுக்கிறீர்கள்?".
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, இதே போல பாமக ஊழல் புகார் கொடுத்ததே என்ற கேள்விக்கு, "புகார் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், புகாரில் முகாந்திரம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது" என்றார்.
பொங்கலுக்கு ரூ.2,500 கொடுப்பதாக அறிவித்தது கொள்ளையடித்த பணத்தில் இருந்து கொடுப்பதாக பாஜக அண்ணாமலை கூறியது பற்றிய கேள்விக்கு, "அப்போது மத்திய அரசு விவசாயிகளுக்கு 6,000 கொடுப்பது எதிலிருந்து கொடுக்கப்பட்டதாம்? 2 பைசா கேட்டு போராடிய 17 விவசாயிகளை சுட்டுக்கொன்றவர்கள் திமுகவினர். இப்போது அவர்களுக்கு விவசாயிகள் மீது கரிசனம்" என்றார்.