சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மாவட்டச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, கிளை, பகுதிச் செயலாளர்கள் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் டிச. 23-ம் தேதி முதல் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் எனவும், கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு, பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும், அந்த கிராமத்தில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 23) காலை, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ள குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தமிழகத்தைக் கடந்த பத்து ஆண்டுகளாகச் சீரழித்த அதிமுக அரசின் ஊழல்களைப் பட்டியலிட்டுக் குற்றப்பத்திரிகையைப் பொதுமக்களிடம் வழங்கினார். பின்னர், கிராமசபைக் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் திமுக தலைவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம்:
"பத்து நாட்களில் 16 ஆயிரத்து 500 கிராமங்களில் கிராமசபை/வார்டு கூட்டங்களை திமுக நடத்துகிறது. இன்று, திருப்பெரும்புதூர் தொகுதியின் குன்னம் ஊராட்சியில் கலந்து கொண்டேன்!
அதிமுகவை நிராகரிப்போம் (#WeRejectADMK) எனத் தமிழகம் தயாராகிவிட்டது. கலந்துகொண்ட ஒவ்வொருவரின் ஆதரவிலும் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது! தமிழகம் மீளும்!".
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.