தமிழகம்

ரத்து செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் தருவதாக போலி தொலைபேசி அழைப்புகள்: ரயில்வே துறை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பணத்தைத் திருப்பி தருவதாகக் கூறி, வங்கிக் கணக்கு விவரங்களை யாராவது தொலைபேசியில் கேட்டால், தெரிவிக்கவேண்டாம் என்று பொதுமக்களை ரயில்வே எச்சரித்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள் பேசுவது போல, பயணிகளை சில மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான கட்டணத்தைத் திருப்பி தருவதாகக் கூறி, அவர்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை கேட்பதாக புகார்கள் வந்து உள்ளன.

இந்திய ரயில்வேயும், அதன் ஊழியர்களும் யாரிடமும் அவர்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை கேட்கமாட்டார்கள். ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவுவைக்கப்படும். அதேபோல், ரயில் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து இருந்தால், அங்கேயே பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே யாரிடமும் தங்களது டெபிட், கிரெடிட் கார்டு, சிவிவிஎண்கள், ஏடிஎம் பின் நம்பர்,பான்கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். யாராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டுமோசடியில் ஈடுபட்டால், உடனடியாக 138 என்ற உதவி எண்ணில்தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT