கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை அருகே நடுக்கடலில் கப்பல்படை வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர். இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971-ம் ஆண்டு நடந்த போரில், இந்தியக் கப்பற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பல் கராச்சி துறைமுகத்தை தாக்கி அழித் தது. இதை நினைவுகூரும் வகை யில் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினமாகக் கொண் டாடப்படுகிறது. இந்த ஆண்டுக் கான கடற்படை தினம் டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான கொண் டாட்டங்கள் தொடங்கியுள்ளன.
இதன் ஒருபகுதியாக, ‘கடலில் ஒரு நாள்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கடற்படை யினர் நடுக்கடலில் எவ்வாறு பணிபுரிகின்றனர் என்பதை விளக் குவதற்காகவும், இத்துறையில் சேர இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையிலும் இந்நிகழ்ச் சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை முன்னிட்டு சுமார் 3 ஆயிரம் பேர் நேற்று கடலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்காக, விசாகப்பட்டினத்தில் இருந்து ஏழு கப்பல்கள் வர வழைக்கப்பட்டிருந்தன.
எதிரிக் கப்பல்களை தாக்குவது, கடற்படை ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள், போர் நடக்கும் நேரத்தில் நடுக்கடலில் ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்புவது உட்பட பல்வேறு விஷயங்களை கடற்படை வீரர்கள் செய்துகாட்டினர். இவை பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்தன. சாகச நிகழ்ச்சி களுக்கு பிறகு கிழக்குப் பிராந் திய கடற்படை அதிகாரி எஸ்.வி.போக்ரே நிருபர்களிடம் கூறிய தாவது: கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை சார்பில் பொதுமக்களை கடலுக்கு அழைத்துச் சென்று சாகசங்கள் செய்து காட்டப்பட்டன. இதில் கடற்படையின் கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து ஏழு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் கூட்டுப் பயிற்சி இன்று முதல் 19-ம் தேதி வரை சென்னை கடற்பகுதியில் நடைபெற உள்ளது.
இந்திய கடற்படையில் மேலும் பல போர்க் கப்பல்களை சேர்க்கும் திட்டம் உள்ளது. சென்னை கடல் எல்லைப் பகுதியில் தற்போது எவ்வித தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை. எனினும் எந்த சவாலையும் எதிர்கொள்ள கடற் படை தயார் நிலையில் உள்ளது.
தமிழக அரசு மற்றும் கடலோர காவல் படை ஆகியவை எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க 27 நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இவ்வாறு போக்ரே கூறினார்.