ஆளுநரிடம் திமுக அளித்துள்ள புகார்கள் அடிப்படையற்றவை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடந்த விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், அவரிடமே மனு அளித்துள்ளனர். அவர்கள் குற்றம்சாட்டுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல உள்ளது. திமுகவின் புகார்கள் அனைத்தும் அடிப்படை இல்லாதவை.
அமெரிக்காவில் நடைபெற்ற வாட்டர்கேட் ஊழலுக்கு பிறகு, இந்தியாவில் பேசப்பட்டது 2ஜி அலைக்கற்றை ஊழல். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சியும் திமுக ஆட்சிதான். இந்திரா காந்தியால் திமுக அரசு மீதுதான் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. தமிழக பொருளாதாரத்தை சீரழித்தது திமுக.
திமுக ஆட்சியில் யாரும் தொழில் செய்ய முடியாது. திரையரங்குகளில் திரைப்படம்கூட திரையிட முடியாது. தொழிலதிபர்கள் பலர் திரைப்படம் எடுத்து மீளமுடியாமல் இருந்தனர். இன்று சுதந்திரமாக தொழில் செய்ய முடிகிறது. ஆன்லைனில் ஒற்றைச் சாளர முறையில் உரிமங்கள் பெற்று தொழில் புரிய முடிகிறது.
திமுகவில் தற்போது உட்கட்சி குழப்பம் உள்ளது. கட்சிக்காரர்களே திமுகவை வீழ்த்திவிடுவார்கள். குடும்பத்துக்குள்ளும் புகைச்சல் உள்ளது.மு.க.அழகிரி நாளை கட்சி தொடங்கினால், திமுக உடையும். உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வந்ததைகட்சிக்காரர்களே முணுமுணுக்கின்றனர். இந்த தேர்தலுடன் திமுக அத்தியாயம் முடிந்துவிடும்.
முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சுப தங்கவேலன், கே.என்.நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன், அன்பரசன், சாத்தூர் ராமச்சந்திரன், என்கேகேபி ராஜா, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் மேயர் குழந்தை வேலு, துரைமுருகன் மீது பல வழக்குகள் உள்ளன. அவர்கள் போலியான, பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் கொண்டு வருகின்றனர். அரசு மீது நல்ல அபிமானத்தில் இருக்கும் மக்களை திமுக திசை திருப்பப் பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.