திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று கட்டணமில்லா சுவாமி தரிசனத்துக்கான நுழைவுச் சீட்டுகள் அனைத்தும், முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டன.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. தற்போது பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசி தினமான வரும் 25-ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது.
கரோனா பரவல் காரணமாக, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அன்று காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டணமில்லா பொது தரிசனம் செய்ய 3 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இதற்காக, 22-ம் தேதி (நேற்று) காலை 10 மணி முதல் 24-ம் தேதி (நாளை) மாலை 5 மணி வரை முன்பதிவு செய்யலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் (www.tnhrce.gov.in) நேற்று காலை 10 மணி அளவில் முன்பதிவு தொடங்கியது. ஒருசில மணி நேரத்தில், கட்டணமில்லா பொது தரிசனத்துக்கான அனைத்து நுழைவுச் சீட்டுகளும் பக்தர்களால் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதனால், தாமதமாக முன்பதிவு செய்ய முயன்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
முன்பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரங்களில், கட்டணமில்லா பொது தரிசனத்துக்கான அனைத்து நுழைவுச் சீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அனைத்து நுழைவுச் சீட்டுகளிலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அந்த நேரத்துக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல, வைகுண்ட ஏகாதசியன்று ரூ.100 கட்டணம் செலுத்தியும் சுவாமி தரிசனம் செய்யலாம். இந்த நுழைவுச் சீட்டை அன்றைய தினம் கோயிலுக்கு வந்து பெற்றுக் கொள்ளலாம். கட்டண தரிசனத்திலும் சுமார் 2 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா காலகட்டம் என்பதால், பக்தர்கள் நலன் கருதியே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அறநிலையத் துறை அதிகாரிகள் கூறினர்.