பிரிட்டனில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் சென்னை வந்தவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும். அவர்களது தெருக்களில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றுசென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் குளிர்சாதன வசதி மற்றும் பயோ கழிப்பறையுடன் கூடிய கன்டெய்னர் பெட்டியில் மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மினி கிளினிக்கில் உள்ள வசதிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: பிரிட்டனில் புதியகரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்லி வழியாக சென்னைவந்தவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்துசென்னை வந்தவர்கள் பற்றிய விவரங்களை எடுத்து மண்டலம், வார்டுவாரியாக பிரித்து அவர்களை மருத்துவக் குழுவினர் நேரடியாக ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏற்கெனவே நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று கணக்கெடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் உடல்ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை நுணுக்கமாக கண்டறிய உள்ளனர்.
பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் வசிக்கும் தெருக்களில் உள்ளஅனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த வழிமுறையை கடைபிடிப்பதால், தொற்று பரவல் இல்லாத சூழல் ஏற்படும்.
அதேபோல, வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் தாமதம் செய்யாமல், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.