டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த ஜனவரி 2015 முதல் இதுநாள் வரை 93 நபர்களுக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மூலம் அனைத்து காய்ச்சல் கண்டவர்களின் விவரங்கள் தினந்தோறும் பெறப்பட்டு சுகாதாரத்துறை பணியாளர்கள் மூலம் கள ஆய்வு செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
பாரம்பரிய மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு மற்றும் மலை வேம்பு இலைச்சாறு போன்றவை அம்மா உண வகங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் குடிசைப்பகுதிகளிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான ரத்த அணுக்கள், ரத்த கூறுகள், ரத்தம் மற்றும் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தொற்று நோய்களை பரப்பும் ஏடிஸ் கொசுக்களை அழிப்பதற்கு புகை பரப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஓவ்வொரு வட்டாரத்திலும், வட்டார அளவிலான விரைவு செயல்பாட்டுக் குழு தயார் நிலையில் உள்ளது. இக்குழுவானது காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிக்கு சென்று காய்ச்சலின் காரணத்தை உடனுக்குடன் கண்டறிந்து, போர்க்கால அடிப்படையில் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்கிறது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.