2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலின்போது திருச்சி மாவட்டத்தில் பயன்படுத்தவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று முதல் வரத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, லால்குடி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி), ஸ்ரீரங்கம், மணப்பாறை ஆகிய 9 தொகுதிகள் உள்ளன. இந்த 9 தொகுதிகளிலும் மொத்தம் 2,531 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே 4,466 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 851 கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களிப்பதை உறுதி செய்யும் 126 கருவிகள் ஆகியன ஆட்சியர் அலுவலகப் பழைய வளாகம் மற்றும் 3 வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் பயன்படுத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 1,220 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,490 கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களிப்பதை உறுதி செய்யும் 4,560 கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், முதல்கட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து இன்று 570 கட்டுப்பாட்டுக் கருவிகள், 230 வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகள் ஆகியன வரப் பெற்றன. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் அவை இறக்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
அப்போது செய்தியாளர்களிடம் ஆட்சியர் சு.சிவராசு கூறும்போது, ''சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் பயன்படுத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முதல் கட்டமாக 570 கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களிப்பதை உறுதி செய்யும் 230 கருவிகள் ஆகியன வரப் பெற்றுள்ளன. அடுத்த வாரத்தில் 1,220 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,920 கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்களிப்பதை உறுதி செய்யும் 4,330 கருவிகள் வந்துவிடும்.
அனைத்துக் கருவிகளும் வந்த பிறகு பெல் பொறியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, ஏற்கெனவே உள்ள பதிவுகள் அனைத்தும் அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மாதிரி வாக்குப்பதிவு நடத்தி, கருவிகள் முழுமையாக செயல்படுகின்றனவா என்று உறுதி செய்யப்படும். தொடர்ந்து தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையிலும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். பின்னர், அந்தந்தத் தொகுதிகளுக்கு உரிய நேரத்தில் அனுப்பப்படும்.
ஒரு வாக்குச் சாவடியில் 1,000 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் கணக்கிட்டு, திருச்சி மாவட்டத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட கருவிகள் 140 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன'' என்றார்.