கடந்த மக்களவைத் தேர்தலில் கோட்டைவிட்டது போல் சித்திரைத் திருவிழா நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் வராமல் இருக்க திருவிழா நடக்கும் தேதி, அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு முன்கூட்டிய மாவட்ட நிர்வாகம் அனுப்ப வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென் தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா புகழ்பெற்றது. மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அழகர்கோயிலில் நடக்கும் இந்தத் திருவிழாவில் இறுதியாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்திப்பெற்றது.
இந்த விழாவைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரள்வார்கள். அதனால், இந்தத் திருவிழா நாளில் உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
கடந்த காலக்கட்டத்தில் இந்த சித்திரைத் திருவிழா நேரத்தில் தேர்தல் வராமல் இருக்க மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே திருவிழா நாட்கள் குறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய தேர்தல் ஆணையத்திற்கும் அறிக்கை அனுப்புவார்கள். அதன் அடிப்படையில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தால் அந்த நாட்களில் தேர்தல் நடக்காமல் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு கட்டமாக நடந்தால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் திருவிழாவுக்கு முன்கூட்டியோ அல்லது முடிந்த பிறகோ தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகம் முன்கூட்டிய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்காததால் கடந்த மக்களவைத் தேர்தல் மதுரையில் சித்திரைத் திருவிழா நாளில் ஏப்ரல் 18-ம் தேதி நடந்தது.
அதற்கு முந்தைய நாள் ஏப்ரல் 17-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், தேர்தல் நாளான 18-ம் தேதி தேரோட்டமும் மறுநாள் 19-ம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவமும் நடைபெற்றது.
அதனால், மக்கள் முன் சித்திரைத்திருவிழா? தேர்தல் திருவிழா என்ற கேள்வி எழுநம்பிய நிலையில் மக்கள், சித்திரைத் திருவிழா கொண்டாடத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தனர்.
தேர்தல் ஆணையம், கூடுதலாக 2 மணி நேரம் வழங்கியும் மக்களவைத்தேர்தலில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைந்தது. அது அப்போதைய மாவட்ட ஆட்சியருக்கே பெரும் நெருக்கடியும், சிக்கலையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வர இருப்பதாக கூறப்படுகிறது. அது முன்கூட்டியே நடக்குமா? அல்லது ஏப்ரல், மே மாதத்தில் நடக்குமா? என்பது பெரிய விவாதமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கான கருத்துகேட்டுப்புகள், ஆலோசனைகளை மாநில மற்றும் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் போல் மதுரை சித்திரைத்திருவிழாவும் ஏப்ரல் மாதத்தில் வர இருக்கிறது.
அதனால், கடந்த மக்களவைத்தேர்தலில் கோட்டை விட்டதுபோல் இந்த சட்டமன்ற தேர்தலிலும் அதுநடக்காமல் இருக்க முன்கூட்டிய சித்திரைத்திருவிழா விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் என்.நரேந்திரன் கூறுகையில், ‘‘வழக்கமாக தேர்தல் நடத்தும் தொகுதிகளின் முக்கியத் திருவிழா நாட்ள்களைக் கணக்கிட்டுதான் தேர்தல் நடத்தும் தேதிகளை அறிவிப்பது ஆணையத்தின் நடைமுறை.
ஆனால், கடந்த மக்களவைத் தேர்தல் சித்திரைத் திருவிழாவின் தேரோட்டமும் கள்ளழகர் எதிர்சேவையும் நிகழும் நாளில் மக்களவைத்தேர்தல் நடந்தது தென் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், சித்திரைத் திருவிழாவும், தேர்தலும் பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தேர்த்திருவிழா ஏப்ரல் 25-ம் தேதியும், அதற்கு அடுத்த மறுநாள் 26-ம் தேதி கள்ளழகர் ஆற்றில் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு வர இருக்கிறது. அதற்கு முந்தைய 10 நாட்களாகவே மதுரையில் சித்திரைத் திருவிழா கொண்டாட்டங்கள் களைகட்ட ஆரம்பித்துவிடும்.
அதனால், இந்த சித்திரைத் திருவிழா நாட்களில் தேர்தல் வராமல் இருக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ’’ என்றார்.