பொய்யான அறிக்கையை ஆளுநரிடம் திமுக கொடுத்துள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி மாவட்டம் வழியாகச் சென்ற அவருக்கு பாளையங்கோட்டை கேடிசி நகரில் மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:
எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தல் யுத்தத்தில் மாபெரும் வெற்றி பெறுவோம். அதிமுக அரசு மீது பொய்யான அறிக்கையை ஆளுநரிடம் திமுக கொடுத்துள்ளது.
இதற்கெல்லாம் இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதாலின் திட்டங்கள் மக்கள் மனதில் இன்னும் நிறைந்திருக்கிறது. திமுக உள்ளிட்ட எத்தனை எதிர்க் கட்சிகள் வந்தாலும் அத்தனையையும் முறியடித்து வெற்றிபெறுவோம்.
லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பால் உருவான அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் அது நடக்காது. வேண்டுமென்றே திட்டமிட்டு இப்போது அவதூறு பரப்புகிறார்கள்.
அதையெல்லாம் வரும் தேர்தலில் அதிமுக முறியடிக்கும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் வேண்டுமென்றே ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில் இம்மியளவும் உண்மை கிடையாது. அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி தேர்தல் வெற்றிதான். இந்த தேர்தல் யுத்தத்தில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் சிப்பாய்கள். வீறுகொண்டு எழுந்து ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் பெறவேண்டும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் இன்பதுரை, நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.