கோவை பாரதியார் பல்கலைக்கழக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தினர். 
தமிழகம்

பாரதியார் பல்கலை.க்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்காவிட்டால் ஆடு, மாடுகளுடன் குடியேறும் போராட்டம்: பி.ஆர்.நடராஜன் எம்.பி. எச்சரிக்கை

க.சக்திவேல்

பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டைத் தராமல் தாமதித்தால், ஆடு, மாடுகளுடன் குடியேறும் போராட்டத்தை ஜனவரி மாதத்தில் நடத்துவோம் என, கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிலத்துக்கான இழப்பீடு மற்றும் வேலை வழங்கக் கோரி பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு, பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் இன்று (டிச.22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, பி.ஆர்.நடராஜன் பேசுகையில், "உடனடியாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தரவேண்டும். அதுமட்டுமின்றி, எம்ஜிஆர் காலத்தில் கூறப்பட்ட, நிலம் அளித்த விவசாயிகளின் வீட்டில் ஒருவருக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

இல்லையென்றால், தை மாதம் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் ஆடு, மாடுகளுடன் பல்கலைக்கழகத்துக்குள் குடியேறும் போராட்டத்தை நடத்துவோம். இது விவசாயிகள் அளித்த நிலம். அவர்கள் நிலத்தில் அவர்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பார்கள். இதனை யார் தடுத்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT