மதுரை போதைப் பொருள் தடுப்புச் சட்ட வழக்குகள் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞருக்கு இடைக்கால தடை விதித்தும், அவரது சொத்து விவரங்களை கணக்கெடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பாண்டியராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பி.சீதாராமன் பணிபுரிந்து வருகிறார்.
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்படும்.
அரசு சிறப்பு வழக்கறிஞர் சீதாராமன், குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை தாமதப்படுத்தி வருகிறார்.
இது தொடர்பாக ஒரு வழக்கில் சீதாராமனை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரித்துள்ளார். இருப்பினும் போதை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வேண்டும் என்றே தாமதம் செய்யப்படுகிறது.
எனவே, மதுரை போதைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சீதாராமன் செயல்பட இடைக்கால தடை விதித்து, அவரை அரசு சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து நீக்கி, நேர்மையான தகுதியானவரை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார்.
பின்னர், மதுரை மாவட்ட போதைத் தடுப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக சீதாராமன் செயல்படுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையை நீதிமன்றம் தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது.
வழக்கறிஞர் சீதாராமன் மற்றும் அவரது குடும்ப சொத்துக்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை டிச. 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.