கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் நினைவு நூற்றாண்டை 'கணிதத் திருவிழாவாக' இரு நாட்கள் கொண்டாடும் பொருட்டு, அவரது 133-வது பிறந்த நாள் விழா, அவர் வாழ்ந்த கும்பகோணத்தில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகரில்லாத கணிதச் சூத்திரங்களை, மனித குலத்துக்கு அளித்து, ஒப்பில்லா சாதனைகள் நிகழ்த்தி கும்பகோணம் நகருக்கு உலகப் புகழ் சேர்த்தவர் கணிதமேதை சீனிவாச ராமானுஜன். இவர் 22.12.1887-ம் ஆண்டில் பிறந்து, 26.4.1920-ம் ஆண்டு மறைந்தார்.
சீனிவாச ராமானுஜன் மறைந்து 100 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையிலும், அவர்தம் வாழ்வும் பணியும் என்றென்றும் பயனுள்ளதாக அமைந்திருப்பதைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையிலும், இந்தியா முழுவதும் கொண்டாட, மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விஞ்ஞான பிரச்சார் முடிவு செய்தது.
அதன்படி, இந்த நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்தது. இதற்கிடையில், கரோனா ஊரடங்கால் திறந்தவெளி நிகழ்ச்சிகள் நடத்தாமல், இணையதளம் வாயிலாகக் கணிதம் தொடர்பான கருத்தரங்குகள், டெல்லி, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி பல்வேறு அமர்வுகளில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் 133-வது பிறந்த நாள் விழா இன்று (டிச. 22) கொண்டாடப்படும் வேளையில், அவர் வசித்த கும்பகோணம் நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
அதன்படி, இன்று காலை கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சன்னதி தெருவில் உள்ள சீனிவாச ராமானுஜனின் வீட்டிலும், அவர் படித்த நகர மேல்நிலைப் பள்ளியிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ், நகர மேல்நிலைப் பள்ளிச் செயலாளர் வேலப்பன், சிட்டி யூனியன் வங்கி பவுண்டேஷன் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், நகர மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் கணித விஞ்ஞானி வி.எஸ்.எஸ்.சாஸ்திரி கணிதமேதை சீனிவாச ராமானுஜன் குறித்துப் புகழுரை நிகழ்த்தினார். இணையதளம் வாயிலாக நடைபெற்ற கணிதத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டது. இதில் கணிதக் கண்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் முனைவர் வி.சுகுமாரன் தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
இந்தக் கணிதத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு நாளை 23-ம் தேதி கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் இணையவழிக் கருத்தரங்கமாக நடைபெறுகிறது. இதில் இணையவழிக் கணித வினாடி வினா போட்டிகள் உள்பட பல நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.