மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாளான டிச.24-ம் தேதி, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உறுதிமொழி ஏற்பு
அதிமுக நிறுவன தலைவர் எம்ஜிஆரின் 33-வது ஆண்டு நினைவு தினம் வரும் 24-ம் தேதிஅனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, 24-ம் தேதி காலை 10மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பின் அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்கின்றனர்.
அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் முகக் கவசம் அணிந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.
மேலும், எம்ஜிஆரின் நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி,கிளை, வார்டு, மாநகராட்சி, பகுதிவட்ட அளவில் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் ஆங்காங்கே எம்ஜிஆர் படங்களை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் செய்ய வேண்டும்.
அதிமுக அமைப்பு ரீதியாக செயல்படும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் டிச.24-ம் தேதி எம்ஜிஆர் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.