எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி கட்சி தொடங்க ரஜினிகாந்த் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘‘ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவேன். அதற்கான தேதியை டிச.31-ம் தேதி அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார். கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி ஆகியோரை நியமித்துள்ளதாகவும் அறிவித்தார். இதையடுத்து, கட்சி தொடங்குவது தொடர்பான அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாவட்டச் செயலாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனையும் நடத்தி வருகிறார்.
மாநிலம் முழுவதும் தகுதியானவர்களை பூத் கமிட்டி நிர்வாகிகளாக நியமிப்பதுடன், அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ரஜினி மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, கட்சியின் பெயர், சின்னம் பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்பிப்பதை உரிய நேரத்தில் முடிக்கவும் திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கெனவே, தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், ‘எம்ஜிஆர் ஆட்சியை வழங்குவேன்’ என்று தெரிவித்திருந்தார். தற்போது கமல்ஹாசன் உள்ளிட்டோரும் எம்ஜிஆர் பெயரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகின்றனர். தமிழக மக்களைக் கவர்வதற்கு கட்சிகளுக்கு எம்ஜிஆர் இன்னும் தேவைப்படுகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், தனது புதிய கட்சியை எம்ஜிஆர் பிறந்த தினமான ஜன.17-ல் தொடங்குவது பற்றி ரஜினிகாந்த் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சி தொடங்கியவுடன் பிரச்சாரத்துக்கு செல்ல ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும், அவரது பிரச்சார சுற்றுப்பயண திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.