மு.க.ஸ்டாலின் 
தமிழகம்

நாளை முதல் திமுக கிராம சபை கூட்டங்கள்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

செய்திப்பிரிவு

திமுக சார்பில் நாளை முதல் கிராம சபை கூட்டங்கள் தொடங்க உள்ளன. பெரும்புதூர் அருகே குன்னம் கிராமத்தில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

தேர்தலையொட்டி ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் தமிழகத்தில் 16 ஆயிரம் கிராமங்கள், வார்டுகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த திமுக தலைமை நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் இதை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

திமுக முன்னணி நிர்வாகிகள் 1,600 பேர், 16 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள், வார்டுகளில் டிசம்பர் 23 முதல் ஜனவரி 10-ம் தேதி வரை கிராம சபை கூட்டங்களை நடத்தி, ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி, திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்கள் நாளை தொடங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியம் குன்னம் கிராமத்தில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் மேல்பட்டி கிராமத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் நடுக்குத்தகை கிராமத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் பெருவிளநல்லூர் கிராமத்தில் கே.என்.நேரு, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் க.பொன்முடி, சென்னை ராயபுரத்தில் ஆ.ராசா, திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியம் வட சின்னார்பாளையம் கிராமத்தில் அந்தியூர் செல்வராஜ் பங்கேற்பதாக திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் பதிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘முதல் 24 மணி நேரத்திலேயே இணையத்தில் `அதிமுகவை நிராகரிக்கிறோம்' (#WeRejectADMK) என்று பதிந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. கிராம சபைகள் தோறும் தமிழகத்தின் வீழ்ச்சிக்கு காரணமான அதிமுகவுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேறட்டும். புதிய விடியலுக்கு உதயசூரியன் உதயமாகட்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT