சென்னை சுரானா நிறுவன லாக்கர்களில் வைக்கப்பட்ட 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில், நிறுவன நிர்வாகிகளுக்கே தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனம், தங்கம் இறக்குமதியில் மோசடி செய்ததாக கூறி, கடந்த 2012-ம் ஆண்டு சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். சுரானா நிறுவனம் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட 400 கிலோ தங்கமும், சுரானா நிறுவனத்தில் உள்ள 72 லாக்கர்களிலேயே வைத்து சீல் வைக்கப்பட்டது. 72 லாக்கர்களின் சாவிகளும், கைப்பற்றிய தங்கம் தொடர்பான பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், வங்கிகளிடம் சுரானா நிறுவனம் பெற்ற ரூ.1,160 கோடியை ஈடுகட்டுவதற்காக, லாக்கர்களில் உள்ள தங்கத்தை வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, லாக்கர்களை திறந்து பார்த்தபோது, 296 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103 கிலோ தங்கத்தை காணவில்லை. இதுகுறித்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
இதில் சிபிஐ அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி சிபிஐ தலைமை அலுவலகம் எச்சரித்தது. இதுபற்றி விசாரணை நடத்த டெல்லி சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. சமீபத்தில் சென்னை வந்த இக்குழுவினர், சுரானா நிறுவனத்தில் சோதனை நடத்திய மற்றும் அப்போது பொறுப்பில் இருந்த சிபிஐ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிஐயின் தென்மண்டல பொறுப்பில் இருந்த முக்கிய அதிகாரி ஒருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது ஓய்வு பெற்றுவிட்ட அந்த அதிகாரி தமிழக காவல் துறையிலும் உயர் பதவியில் இருந்தவர் ஆவார்.
லாக்கர் தங்கம் மாயமானதில், சுரானா நிறுவன நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் சிபிஐ அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, சுரானா நிறுவன நிர்வாகிகளை நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.