தமிழகம்

மாவட்டங்களில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா: போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி வழக்கு

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி மாவட்டந் தோறும் நடைபெறும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க டி.ஜி.பி.-க்கும், சம்பந்தப்பட்ட காவல்துறை ஐ.ஜி.க்கும் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பாண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விஜயகாந்த் பிறந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு மாவட்டத்திலும் “மக்களுக்காக மக்கள் பணி” என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 16 மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இன்னும் 17 மாவட்டங்களில் நவம்பர் மாதம் வரை இந்நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் போதிய பாதுகாப்பு அளிப்பதில்லை. எதிர்கட்சித் தலைவர் என்பதால் உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. “எதிர்கட்சித் தலைவர் பதவி அமைச்சர் பதவிக்கு இணையானது. எனவே, எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று பலதடவை காவல் அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். அதன்பிறகும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை.

வரும் 7-ம் தேதி தூத்துக் குடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை யொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமேசுவரம், சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

எனவே, இந்த நிகழ்ச்சிகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டிஜிபி-க்கும், சம்பந்தப் பட்ட காவல்துறை ஐ.ஜி.க்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT