தமிழகம்

பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு

செய்திப்பிரிவு

பைக் ரேஸில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பிடிக்க போக்குவரத்து கூடுதல் ஆணையர் தனிப்படை அமைத்துள்ளார். மேலும் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு சிக்னல்களில் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் விபத்துகள் மற்றும் விபத்து உயிரிழப்புகளை முற்றிலும் குறைக்கவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பைக் ரேஸ்களை தடுக்கஉத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும் மெரினா காமராஜர்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை,பழைய மகாபலிபுரம் சாலை உட்பட மேலும் சில சாலைகளில் சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பைக் ரேஸ் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் இதுபோன்ற பைக் ரேஸ்களை தடுக்கவும் அதில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்யவும் தனிப்படைகளை அமைத்துள்ளார்.

இந்த தனிப்படை போலீஸார் காலை மற்றும் மாலை நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் சாலையோரங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களையும் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க முகக்கவசம், சீட் பெல்ட் அணியாதது, சிக்னல்களை மதிக்காமல் முன்னேறி செல்வது, அதிவேகமாக வாகனங்களை இயக்குவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பிடித்து சிக்னல்களின்ஓரம் நிற்க வைத்து போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அரை மணி நேரம் அறிவுரை வழங்குகின்றனர்.

SCROLL FOR NEXT