வருங்கால இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இல்லங்களை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கடல்சார் கல்வியின் பயிற்சி மற்றும் பணிநியமன ஆணையை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார்.
பின்னர், பயிற்சி மற்றும் பணிநியமன ஆணையை பெற்ற மாணவர்களையும் மாணவர்களுக்கு உதவிய நிறுவனங்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக ‘ஒளிரும் நம்பிக்கை’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற சமூ கநலத் துறை அமைச்சர் வி.சரோஜா பேசியதாவது:
தமிழகம் முழுவதும் 1,140 பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 50 ஆயிரம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசு குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வருங்கால இந்தியாவை உருவாக்கக் கூடிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
தற்போது பயிற்சி மற்றும் பணி நியமன ஆணையை பெற்றுள்ள மாணவர்களின் கடந்த காலம் பார்க்கப்படவில்லை. அவர்களுடைய எதிர்கால நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட்டுள்ளது. தற்போது பணிநியமனம் பெற்ற மாணவர்கள் தங்களின் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, அனைவருக்கும் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னேறுவதற்கான சூழல்..
முன்னதாக, அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வெ.இறையன்பு பேசும்போது, “எல்லா குழந்தைகளும் பிறக்கும்போதே திறமைசாலிகளாகவே பிறக்கின்றனர். கிராமப்புற குழந்தைகளைவிட நகர்புற குழந்தைகளுக்கு முன்னேறுவதற்கான சூழல் அதிகமாக கிடைக்கிறது.
அதேநேரத்தில் அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஒருமுறை நிச்சயம் வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சமூகநலத் துறை செயலாளர் எஸ்.மதுமதி, சமூக பாதுகாப்புத் துறையின் ஆணையர் லால்வேனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஒருமுறை நிச்சயம் வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.