செஞ்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசுகிறார். 
தமிழகம்

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் ட்ரில்லியன் டாலருக்கு பொருளாதாரம் உயரும்: செஞ்சி பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

செய்திப்பிரிவு

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தனது பிரச்சார பயணத்தை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி யில் நேற்று மாலை அவர், பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது:‘ஜனநாயகம்’ என்றால் மக்கள் தான் நாயகர்கள். அதையும் சரியாக புரிந்து வைத்துள்ளது மக்கள் நீதி மய்யம். நம்மை யாராவது திட்டுகிறார்கள் என்றால் திரும்ப திட்டுவது முக்கியமில்லை. அவர்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது. அவர்களுக்கு பதில் சொல்லிகொண்டு பிரச்சார கூட்டத்தை நடத்த முடியாது. செஞ்சிக்கு வந்தால்,‘கோட்டையைப் பிடிக்க போகிறார்களா!‘ என்கிறார்கள். இங்கேயும் கொடியை நடுவோம்; அங்கேயும் கொடியை நடுவோம். நாங்கள் சேவை மனப்பான்மையோடு தான் பயணத்தை தொடர்கிறோம்.

தென்பெண்ணையில் தடுப்பணை கட்ட முடியும். தடுப்பணையை இங்கு கட்டுகிறோமோ இல்லையோ, கஜானாவுக்கு ஒரு தடுப்பணை கண்டிப்பாக கட்ட வேண்டும். அதற்காக நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம். .

விவசாயி என்ற சொல் ஆண்களை மட்டும் குறிக்காது. அது பெண்களையும் குறிக்கும். அந்த நிலையை நாம் உருவாக்குவோம்.

இன்னும் மாசு படாத இளை ஞர்கள், மாணவர்களே நாளையை நாட்டின் தலைவர்கள். அவர்களை நம்பி இருக்கிறது மக்கள் நீதி மய்யம். வீட்டை காக்கும் இல்லத்தரசிகள் நாட்டையும் காக்க வருவார்கள் என மக்கள் நீதி மையம் நம்புகிறது.

என் நேர்மையை சீண்டாதீர்கள்!

என்னை, ‘முழு நேர அரசியல் வாதியா!’ எனக் கேட்கிறார்கள். யாரும் முழுநேரம் கிடையாது. நான்முழு நேரம் அரசியலை நம்பி வந்திருக்கிறேன் என்று செல்லும் போது, எங்கள் வருவாய் தொக்கி நிற்கிறது. என்னுடையநேர்மையை சீண்டினால் எனக்கு கோபம் வருகிறது. இதை வன்முறையாக பேசவில்லை.

தவறான புரிதலில் குஷ்பு கூறுகிறார்

செஞ்சியில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லியில் இடைத்தரகர்கள் தான் போராடுகிறார்கள் விவசாயிகள் போராடவில்லை என்று குஷ்பு கூறியது தவறான புரிதல். அங்கு இருப்பவர்கள் அனைவருமே விவசாய உபகரணங்களுடன், தாங்கள் விவசாயிகள் என்ற ஆதாரங்களுடன் போராடி வருகிறார்கள். அவர்கள் இடைத்தரகர்கள் அல்ல. சேற்றில் கால் பதித்தவர்கள். இங்கிருந்து போய் அவர்களுக்காக ஆதரவு குரல் கொடுப்பவர்களும் விவசாயிகள். மண்ணின் மைந்தர்கள்.

தேர்தலுக்குப் பிறகு கமல்ஹாசன் காணாமல் போய் விடுவார் என அமைச்சர்கள் விமர்சனம் செய்து வருவது அவர்களின் பயம், அவர்களின் பிரார்த்தனை என்றுதான் நினைக்கிறேன். அது நடக்குமா நடக்காதா என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக கேட்கிறது. அவர்களுக்கு என்ன அவசரமோ!” என்றார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வாரந்தோறும் 7 அம்ச திட்டங்களை தந்து கொண்டே இருப்போம். அத்தனையும் தரமான திட்டங்கள். தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்று வது எங்கள் கனவு. அதை நிறைவேற்றிக் காட்டும் தைரியம், திட்டம் எங்களிடம் உள்ளது. இப்போது இருப்பதில் இருந்து நான்கு மடங்கு பொருளாதாரத்தை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நீங்களும், நாங்களும் சேர்த்து கை கோர்த்தால் ‘நாளை நமதே’. இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கவிஞர் சினேகன், மக்கள் நீதி மய்ய மாநில பொது செயலாளர் மவுரியா, விழுப்புரம்மண்டல மாநில செயலாளர் பதிஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT