காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கவிஞர் சல்மா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர். | படங்கள்: ஜி.ஞானவேல்முருகன். 
தமிழகம்

காஸ் சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் மீது மேலும் சுமை: மத்திய, மாநில அரசுகள் மீது அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றச்சாட்டு

அ.வேலுச்சாமி

கரோனாவால் மக்கள் ஏற்கெனவே பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள நிலையில், காஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக மக்கள் மீது மேலும் சுமை திணிக்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மத்திய அரசு தொடர்ந்து சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருவதைக் கண்டித்தும், விலையைக் குறைக்க வலியுறுத்தியும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக மகளிரணிச் செயலாளர் லீலா வேலு தலைமை வகித்தார். கவிஞர் சல்மா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

அதைத் தொடர்ந்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, ''கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருகின்றனர். கரோனா தொற்று காரணமாகப் பொதுமக்கள் அனைவரும் பொருளாதாரமின்றி, வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். பலர் தங்களுடைய வேலையை இழந்துள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும்தான் அவர்களுக்குக் கைகொடுத்துத் தூக்கிவிட வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக மக்கள் மீது மேலும் மேலும் சுமையைத் திணித்து எழுந்திருக்க முடியாத அளவுக்கு மாற்றி வருகின்றனர்.

காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருச்சி மத்திய, வடக்குத் திமுக சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர்.

கரோனா காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என நாங்கள் கோரினோம். அப்படியெல்லாம் செய்ய முடியாது எனக்கூறிய அரசு, இப்போது ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.2,500 வழங்குகிறது. மக்கள் தெளிவாக உள்ளனர். தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இதனை வழங்குகின்றனர் என்பது மக்களுக்குத் தெரியும். விவசாயிகள் நடத்தும் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் தூண்டுதலின்பேரில் நடைபெறுவதாகக் கூறுவது வேதனையளிக்கிறது'' என்றார்.

இதில் மலைக்கோட்டை பகுதிச் செயலாளர்கள் பாலமுருகன், மதிவாணன் உட்பட திமுக நிர்வாகிகள், மகளிரணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதேபோல திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், மத்திய மாவட்டப் பொறுப்பாளர் க.வைரமணி, துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மகளிரணி நிர்வாகி விஜயா ஜெயராஜ், பகுதிச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT