தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை மாநாட்டில் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி பேசினார். அருகில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் உள்ளனர். 
தமிழகம்

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்: தமிழக விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

வி.சுந்தர்ராஜ்

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

உழவர் பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவின் 36-வது நினைவேந்தல் மற்றும் கோரிக்கை மாநாடு தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது.

மாநாட்டுக்குத் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் த.மணிமொழியன் வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி சிறப்புரையாற்றினார். மாநாட்டில் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சுந்தரம், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம், மாவட்டத் துணைத் தலைவர் பா.தட்சிணாமூர்த்தி, சட்ட ஆலோசகர் ஆர்.பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கக்கூடிய சூழல் உள்ளதால் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என மாநாட்டில் பங்கேற்றோர் வலியுறுத்திப் பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறும்போது, ’’மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களால், தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள சிறு, குறு விவசாயிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை மறுக்கப்படுகிறது. தனியார் மண்டிகளின் ஆதிக்கத்தினால் விவசாயிகள் விளை பொருள்களை அவர்களிடம்தான் விற்க வேண்டும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீள வேண்டும் என்றால் அந்தச் சட்டங்களை மறுபரீசிலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.

டெல்டாவில் ஏற்பட்ட புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லைத் தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையாக உள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விரைவில் போராட்டத்தினைத் தொடங்க உள்ளோம்.

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது எனத் தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார். ஆனால் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டங்களால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமானால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தினை நடத்துவோம்’’ என்றார்.

இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து விவசாயப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT