நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டப்பட்ட ஆதிதிராவிடர் நல உயர்மட்டக்குழுவின் கூட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்காததைக் கேள்வி எழுப்பி நடவடிக்கை எடுக்க சமூக அமைப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை அரங்கிலிருந்து வெளியே செல்லுமாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான உயர்மட்டக்குழு கூட்டம் ஹோட்டல் அக்கார்டில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மற்றும் அரசு சாரா உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டம் கூடியதால் ஏராளமானோர் பங்கேற்றனர். பலரும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பினர். தொடக்கத்தில் முன்னாள் எம்எல்ஏ நீல கங்காதரன் (காங்கிரஸ்) பேசுகையில், "சிறப்புக் கூறு நிதியான ரூ.348 கோடி 22 துறைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறையில் நடப்பாண்டு ரூ.149 கோடி நிதி ஒதுக்கி, நிதி செலவிடப்படுவது தெரிகிறது. இதர துறைகளில் ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படுவது தெரிவதில்லை.
புதுச்சேரியில் தீண்டாமை நீறுபூத்த நெருப்பாக உள்ளது. குறிப்பாக இந்து அறநிலையத் துறையில் தீண்டாமை இன்னும் உள்ளது. பல ஆலயங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இதுகுறித்துக் காவல் நிலையம் சென்றாலும் நடவடிக்கை இல்லை. புதுவையில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறைக்குத் தனியாக ஐஏஎஸ் அதிகாரி இல்லை. கடந்த 4 ஆண்டுகளில் சிறப்புக்கூறு நிதியில் ரூ.125 கோடி பாக்கி உள்ளது. இதனை இந்த ஆண்டிலேயே செலவிட வேண்டும்" என்றார்.
முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி (திமுக) பேசுகையில், "சட்டப்பேரவைத் தேர்தலின்போது சிறப்புக்கூறு நிதியை 100 சதவீதம் செலவு செய்வோம் என வாக்குறுதி அளித்தீர்கள். நான்கரை ஆண்டுகள் முடிவடைந்த பின்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதற்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு முக்கிய காரணம். எந்த கோப்பை அனுப்பினாலும் நிதிச்செயலர் திருப்பி அனுப்புகிறார். இதனால் திட்டங்கள் முடங்கிப் போகின்றன. ஆளுநருக்கும் இத்திட்டங்கள் தொடர்பாகத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவபொழிலன் பேசுகையில், "சிறப்புக்கூறு நிதியின் வரவு, செலவைத் துறைரீதியாகத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் இதனைப்பற்றிப் பேச முடியும். அதிகாரிகளை வரிசையாகப் பேசச் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டார்.
அப்போது அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட வரிசையில் பெரும்பாலான அதிகாரிகள் இல்லை. முக்கியமாக ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் இல்லை. இதனையடுத்துக் கூட்டத்தில் பங்கேற்ற பலரும் அதிகாரிகள் வராமல் கூட்டத்தை ஏன் நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். குறிப்பாக தலைமைச் செயலர், நிதிச் செயலர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட ஆட்சியர்கள், பிற துறைகளின் முக்கிய அதிகாரிகள் இல்லை. வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர்.
அப்போது முதல்வர் நாராயணசாமி, இதுபற்றி விளக்கம் கேட்கப்படும் என்றார். அதை அவர்கள் ஏற்கவில்லை. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களைப் பார்த்த முதல்வர் நாராயணசாமி, "கூட்ட அரங்கிலிருந்து பத்திரிகையாளர்கள் வெளியே செல்ல வேண்டும்" என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் புறப்பட்டனர். கூட்ட அரங்கின் அறைக் கதவு மூடப்பட்டு கூட்டம் தொடர்ந்து நடந்தது.