தமிழகம்

மின்வாரியம் எந்தச் சூழ்நிலையிலும் தனியார் மயம் ஆகாது; அரசாணை வாபஸ்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மின் வாரியத்தில் தனியார் மூலம் பணி நியமனம் செய்யும் உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். 10 ஆயிரம் கேங்மேன் பணிக்கு உயர் நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தொடுத்துள்ள வழக்கை வாபஸ் பெற்றால், உடனடியாகப் பணி நியமனம் செய்யப்படும் என்று அறிவித்தார்.

மின் வாரியத்தில் தனியார் மூலம் ஆட்களை எடுப்பதை எதிர்த்து மின் ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“மின்சார வாரியம் தனியார் மயமாக்க உள்ளதாக ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனால் தனியார் மயமாக உள்ளது என்ற தகவல் வெளியானபோது நான் அன்றைய தினமே அதை மறுத்து மின்சார வாரியம் எந்தச் சூழ்நிலையிலும் தனியார் மயம் ஆகாது. வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோமே தவிர எந்தக் காலத்திலும் தனியார் மயமாகாது என்று சொன்னேன்.

மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தபோதுகூட முதல்வர் உடனடியாக மத்திய அரசுக்கு இது கூடாது எனக் கடிதம் எழுதினார். நாங்கள் தொடர்ந்து மின்சார வாரியம் அரசுத் துறையாகத்தான் இருக்கும், தனியார் மயமாகாது என்று உறுதியாகச் சொல்லி, பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் போராட்டம் நடத்தும் ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள்.

அவர்களது எண்ணம் என்னவென்று எங்களுக்குப் புரியவில்லை. இந்த அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சியா என்று தெரியவில்லை. தனியார் மயமாகாது என்று நாங்கள் உறுதியாகச் சொல்லியும் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும்கூட அன்றைய தினம் அனுப்பிய ஆணை திரும்பப் பெறப்படுகிறது.

நான் ஏற்கெனவே சொன்னப்படி 50% பணியாளர்கள் குறைவாக உள்ள பகுதிகளில் அங்கு தொய்வின்றி பணி தொடர, தடையில்லா மின்சாரம் வழங்க அந்தப் பகுதியில் உள்ளவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆணை வழங்கப்பட்டது. அதை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள். தனியார் மயமாக்குவதாக எண்ணிக்கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆணை ரத்து என அறிவிக்க நினைத்தேன். வர மறுத்துவிட்டார்கள். ஆனாலும் பரவாயில்லை. மக்களுக்கு உண்மை புரிவதற்காக அந்த ஆணையை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம். எந்தக் காலத்திலும் மின் வாரியம் தனியார் மயம் ஆகாது. ஆணை ரத்து என அறிவிக்கிறேன்.

கேங்மேன் பணிக்கு 5000 பேரை எடுப்பதாகத் தெரிவித்திருந்தோம். காலிப் பணியிடங்கள் அதிகமாகியிருந்த காரணத்தால், முதல்வர் 10,000 பேரை எடுக்கச் சொன்னதின் அடிப்படையில் ஆணையிட்டோம்.

தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தடை வாங்குவதற்காக உயர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். அவர்களிடத்தில் பணி செய்த நபர்களுக்குப் பணி வழங்க வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கினால் அடுத்த கணமே இந்த வாரத்திலேயே 10,000 பேருக்குப் பணி வழங்கத் தயார்.

அதேபோன்று 30 ஆயிரம் பேரை எடுக்க உள்ளோம் என்பதும் தவறான ஒன்று. எங்கெங்கு ஆட்கள் குறைவாக உள்ளனரோ அங்குதான் ஆட்களை வெளியிலிருந்து எடுக்கச் சொன்னோம். மின் வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் யாரும் இல்லை. டெண்டர் எடுத்த நிறுவனங்கள் அவர்கள் பணிக்கு ஆட்களை வைத்துள்ளார்கள். அதை நாங்கள் எப்படி ஏற்க முடியும்?

அந்தப் பணிக்கு வருபவர்கள் முறையாகத் தேர்வு எழுதி, சோதனையில் வென்று பணியைப் பெறட்டும் என்று சொல்கிறோம். நாங்கள் ஏற்கெனவே ஆட்களைத் தேர்வு செய்து தயாராக உள்ளோம். தொழிற்சங்கங்கள் வாபஸ் வாங்கினால் இந்த வாரமே ஆர்டர் போடுகிறோம். தொழிற்சங்கங்கள்தான் இதற்குத் தடையாக உள்ளன''.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT