காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தும், விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் காரைக்காலில் இன்று (டிச.21) திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக மகளிரணி சார்பில், காரைக்கால் தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியினர் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கீதா ஆனந்தன் தலைமை வகித்தார். காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.
பின்னர் நாஜிம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அத்தியாவசியப் பொருட்களில் முதன்மையான பொருளாக உள்ள காஸ் சிலிண்டரின் விலை, இந்த ஆண்டு மட்டும் 5 முறை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் மாதம் 2 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மத்தியில் ஆட்சி நடத்துகிறதா என்ற எண்ணம் ஏற்படும் வகையில் அரசு நடந்து கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தபோதும், பெட்ரோல் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தபோதும் பெட்ரோல் விலை குறைக்கப்படவே இல்லை. ஒவ்வொரு நாளும் மக்களையும், விவசாயிகளையும் பாடுபடுத்திக் கொண்டிருக்கிற மத்திய அரசு என்றைக்கு விழிக்கும் எனத் தெரியவில்லை. அதுவரையில் திமுக சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றார்.
முன்னதாக, மாநில மகளிர் அணி அமைப்பாளர் வைஜெயந்திராஜன் வரவேற்றார். கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.