ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
பொங்கல் திருநாளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.2,500 பரிசுத்தொகையை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதைப்பார்த்து திமுக வியந்து போயுள்ளது. சர்க்கரை ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்ற வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால், சர்க்கரை ரேஷன் கார்டுகளை, அரிசி கார்டாக மாற்றிக் கொள்ள அரசு அறிவிப்பு வெளியிட்டது. அரிசி கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
தமிழகம் அமைதியான மாநிலமாகவும், மின்வெட்டே இல்லாத மாநிலமாகவும், அனைத்து கட்டமைப்புகளும் கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. இதனால், அனைத்து முதலீட்டாளர்களும் தமிழகத்கில் தொழில் தொடங்க முன்வந்துள்ளனர்.
இதன்மூலம், இன்னும் 6 மாத காலத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவே மீண்டும் வெற்றிபெறும். மீண்டும் தமிழக முதல்வராக பழனிசாமியே பொறுப்பேற்பார். இவ்வாறு அவர் கூறினார்.