இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு சிகிச்சை அளிக்கும் நவீன கருவியைப் பயன்படுத்துவது குறித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனை இதயவியல் துறையில் ஆஞ்சியோபிளாஸ்ட்டி ஸ்டன்ட் பொருத்துதல் சிகிச்சை கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதுவரை 3,200 ஆன்ஜியோகிராம் பரிசோதனைகளும், 1,173 ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால், சிக்கலான ரத்தக் குழாய் அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு, ரத்தக் குழாயின் உள்ளே மெல்லிய வீடியோ கேமராவைப் பயன்படுத்தி, துல்லியமாக சிகிச்சை அளிக்க நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.
பெரிய தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தற்போது இந்த தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கும் விரைவில் அந்த வசதி கிடைக்க உள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ் கூறியதாவது: ஏழை மக்களுக்கும் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக ரூ.1.50 கோடி மதிப்பில், ரத்தக் குழாயில் சிகிச்சை அளிக்கும் இயந்திரம் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ரத்தக்குழாய் அடைப்பு, விரிசல் போன்ற பாதிப்புகளுக்கு, துல்லிய சிகிச்சை அளிக்க முடியும். ஸ்டன்ட் பொருத்திய பிறகு, அது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைப் பார்ப்பதற்கும் இந்த இயந்திரம் உதவும். இதில் ஒருமுறை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் செலவாகும்.
கோவை அரசு மருத்துவமனைக்கு இந்த இயந்திரம் வந்தபிறகு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். அதற்கு முன்னோட்டமாக, மருத்துவமனைக்கு நவீன இயந்திரத்தை வரவழைத்து, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர் டி.எஸ்.சதா பயிற்சி அளித்தார். இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 பேருக்கு சிகிச்சை அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி நடைபெற்ற கருத்தரங்கை, இதயவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெ.நம்பிராஜன் ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.