தமிழகம்

பலமான கட்சிதான் கூட்டணி தலைமை ஏற்கும்: பாஜக மாநில துணைத் தலைவர் கருத்து

செய்திப்பிரிவு

பாஜக கோவை மாநகர் மாவட்ட பழங்குடியினர் அணி செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக மாநிலத் தலைமை, கூட்டணியில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. முக்கிய முடிவுகளை தேசிய தலைமைதான் அறிவிக்க முடியும் என்பதைத்தான், மாநிலத் தலைவர் முருகன் சொல்லியிருந்தார். அதிமுக நண்பர்கள் இதைப் புரிந்துகொண்டு பேச வேண்டும்.

தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வரும்போது, அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். கூட்டணி அமையும்போது, பலமான கட்சிதான் தலைமை ஏற்கும். எது பலமான கட்சி என்பது உங்களுக்குத் தெரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் பழங்குடியின மக்களுக்கு எளிதில் சாதிச் சான்று கிடைக்க, தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ஊராட்சிப் பகுதிகளில் இலவச வீடுகளை கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி ஜக்கார்பாளையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழக பாஜக சார்பில் 1,000 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய காங்கிரஸ் அரசு விவசாயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை.

தற்போது நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் செலுத்தப்படுகிறது விவசாயிகள் தலைகுனிந்து வாழ வேண்டிய நிலை தற்போது மாறியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு பிரச்சினையையும் பிரதமர் மோடி சரி செய்து வருகிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் 16 ஆயிரம் இடைத்தரகர்களும், அவர்களுக்கு உதவியாக 2.50 லட்சம் பேரும் உள்ளனர். இவர்கள்தான் தற்போது டெல்லியில் போராட்டத்தை நடத்துவதற்கு தூண்டுதலாக இருந்துள்ளனர். இடைத்தரகர்களிடம் சிக்கி விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. திமுக-வைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். எனவே, விவசாயம் தனியார்மயமாக மாறுவதாக இவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT