கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் கடல் அழகை ரசிக்கின்றனர்.கன்னியாகுமரி, திற்பரப்பில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கரோனா ஊரடங்குக்கு பின்னர் கடந்த மாதத்தில் இருந்து கன்னியா குமரியில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர். தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் களைகட்டியுள்ளன.
குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம், காட்சி கோபுரம், சூழலியல் பூங்கா ஆகியவற்றையும் பார்வையிட்டனர். அங்குள்ள திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோயிலில் ஏராளமானோர் வழிபட்டனர்.
அதேநேரம் கன்னியாகுமரியில் பலத்த சூறைக்காற்றால் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு நேற்று படகு சேவை ரத்து செய்யப்பட்டது. இது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
கன்னியாகுமரியைப் போன்றே திற்பரப்பு நீர்வீழ்ச்சி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் பிற சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் நேற்று அலைமோதியது. திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி வழங்கிய பின்பு நேற்று அதிக அளவிலான மக்கள் கூடி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.