பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கு ஆதிநிலை என கருதப்படும் சுத்தவெளி, அதன் தெய்வீக காந்த சக்தி, வேதாத்திரி மகரிஷியின் தத்துவம் பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் சென்னையில் இன்று நடக்கிறது.
இது தொடர்பாக ஆழியாறு உலக சமுதாய சேவா மையத்தின் இயக்குநர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) எம்.வி.ரபீந்திரநாத் சென்னையில் நேற்று கூறியதாவது:
மகரிஷியின் தத்துவம் அமைதியையும், மனத் தெளிவையும் தரக்கூடியது. இதன்மூலம் ஒழுக்கம், அன்பு, கருணை ஏற்படும். அவரது தத்துவம் இறைத்தன்மையை அறிவுப்பூர்வமாக ஆராய்கிறது. மக்களுக்கு பிரபஞ்ச தோற்றம், பிரம்ம ஞானம் குறித்து தெரிந்தால் உலகில் அமைதி நிலவும், நாடுகள் வளம்பெறும், தனிமனிதனின் வாழ்க்கை மேம்படும் என்று கருதினார் மகரிஷி.
பரபரப்பான இன்றைய உலகில் மகரிஷியின் தத்து வங்களை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், வேதாத்திரி மகரிஷியின் தத்துவம், பிரபஞ்ச தோற்றத்துக்கெல்லாம் ஆதிநிலை என கருதப்படும் சுத்தவெளி, அதன் தெய்வீக காந்தநிலை சக்தி தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்துடன் இணைந்து சென்னையில் வியாழக்கிழமை (இன்று) நடத்தப்படுகிறது.
கிண்டியில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும் இந்த கருத்தரங்கை உலக சமுதாய சேவா மையத்தின் தலைவர் எஸ்கேஎம். மயிலானந்தன் தொடங்கிவைக்கிறார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் பி.அய்யம்பெருமாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.