செங்கம் அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவினர் கைகலப்பில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணக்குறுக்கை கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பின்னர் அவர், விழா மேடையில் கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சென்றார்.
அப்போது, அதிமுக பெண் நிர்வாகியின் ஆதரவாளர்களும், கண்ணக்குறுக்கை கிராம அதிமுகவினரும் போட்டி போட்டுக் கொண்டு மேடையில் ஏறினர். இந்த இரண்டு தரப்புக்கும் ஏற்கெனவே முன்விரோதம் உள்ளதால், அவர்களிடையே வாக்குவாதம் முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். மேடையில் இருந்து சென்ற பிறகும் வாக்குவாதம் தொடர்ந்தது. அவர்களை, மாவட்டச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சமாதானப்படுத்த முயன்றும் பலனில்லை. ஒரு கட்டத்தில், இரு கோஷ்டிகளும் கைகலப்பில் ஈடுபட்டது. இதனால் நாற்காலிகள் சேதமடைந்தன.
இதையடுத்து, கர்ப்பிணிகளுக்கு அவசர அவசரமாக நலத்திட்ட உதவி களை வழங்கிவிட்டு, அமைச்சர் உள் ளிட்டவர்கள் புறப்பட்டு சென்றனர். அவர்களை, காவல் துறையினர் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அமைச்சர் முன்னிலையில் அதிமுக வினர் கைகலப்பில் ஈடுபட்டது சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது.