தமிழகம்

அதிமுக, திமுக போல வலுவான கட்டமைப்பு; பூத் கமிட்டி நியமனங்கள் முறையாக நடக்க வேண்டும்: ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

ரஜினி தொடங்க உள்ள கட்சியில் பூத் கமிட்டி நியமனங்கள் முறையாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் எச்சரித்துள்ளது.

அடுத்த மாதம் கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், இதுகுறித்த அறிவிப்பை வரும் 31-ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தனது கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும் நியமித் தார்.

இதற்கிடையே, ரஜினி கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்குமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூறியதாவது:

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வழிகாட்டுதல்படி, கடந்த2 ஆண்டுகளாகவே பூத் கமிட்டிக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில், மறைந்தவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக செயல்பட முடியாமல் இருப்பவர்களுக்கு மாற்றாக புதியவர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சரிபார்த்து பூத் கமிட்டியில் அவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இதில், பணம் பெற்றுக்கொண்டு நபர்களை சேர்ப்பது போன்ற முறைகேடுகள் நடந்தால், மாவட்டச் செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். பூத் கமிட்டிக்கு தகுதியானவர்களை நியமிப்பதில் எவ்வித சமரசமும்செய்யக்கூடாது என்று கட்சி மேற்பார்வையாளர், தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவுறுத்தியுள்ளனர். அதிமுக, திமுகவுக்கு இணையாக, கிராமங்கள் முதல் நகர்ப்புறம் வரை கட்சியின் கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT