தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் உத்தரவின் பேரில், சுற்றுப்புற சூழலில் தனி கவனம் செலுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை இணைந்து மியாவாக்கி அடர் வனங்களை உருவாக்கி வருகிறது.
தமிழகத்தில் பேருந்து நிறுத்தங்கள், கடைத் தெருக்கள் போன்றபல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் இன்றியும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதை பார்க்க முடிகிறது.
இனிமேல் வரவுள்ள தடுப்பூசியை நம்பாமல் நிரந்தர தீர்வான முகக்கவசத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைவரும் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
சென்னை ஐஐடியில் நேற்று 106 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தில் 279 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில், 1.7 சதவீதம் மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் பாதிப்பு 3 சதவீதமாக உள்ளது. இதனால், பெரிய அளவிலான தொற்று பரவல் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு அறிகுறி இருந்தால் மட்டும்பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். தற்போது தமிழக அரசிடம் தேவையான வசதிகள் இருப்பதால், சந்தேகம் இருந்தால்கூட அனைத்து சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.