நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 10,000 ஏக்கரில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள் ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் மேலும் 10,000 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட் டங்குடி, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், வடகரை, குத்தாலம், நரிமணம், எரவாஞ்சேரி, திட்டச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டிருந்த 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் நீர் தேங்கி, சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியிருந்தன.
இந்நிலையில், இந்த வயல்களில் இருந்து தற்போது மழைநீர் வடியத் தொடங்கினாலும், பலஇடங்களில் மழைநீர் சூழ்ந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. சில பகுதிகளில் நெற்கதிர்கள் முளைவிட்டுள் ளன. ஜனவரி முதல் வாரம் வரை மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவற்றை போர்க்கால அடிப்படையில் அரசு வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசூர் கிராமத்தில் ஆட்சியர் சாந்தா தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பகுதி நேர அங்காடியை திறந்துவைத்த தமிழக உணவுத் துறைஅமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் காரணமாக, 2,26,557 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தன. அதன்தொடர்ச்சியாக தற்போது பெய்துவரும் மழை காரணமாக, கூடுதலாக 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தற்போது பாதிக்கப்பட் டுள்ள பயிர்களுக்கும் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தருவதுடன், அரசின் நிவாரணமும் வழங்கப்படும் என்றார்.