’பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு’ திட்டத்தின்கீழ் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ள பெரும்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ். 
தமிழகம்

பெரும்பாக்கத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் வீடுகளுக்கு டிச.28-ம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்- முன்னேற்பாடுகளை செங்கை ஆட்சியர் ஆய்வு

செய்திப்பிரிவு

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய இடத்தில் வரும் 28-ம் தேதி ரூ.120 கோடி மதிப்பீட்டில் 1,152 வீடுகள் கட்ட பிரதமர் மோடி அடிக்கல்நாட்டவுள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

‘பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு’ திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் வீடற்ற ஏழைகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பெரும்பாக்கத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 1,152 வீடுகளை உள்ளடக்கிய 5 மாடி கட்டிடம் கட்டப்படவுள்ளது. வரும் 28-ம் தேதி காணொலி காட்சி மூலம் இக்கட்டிடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், வருவாய் அலுவலர் க.பிரியா, குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் சேகர் ஆகியோர் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ள இந்த இடத்தைநேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த் துறையினர், குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாக்கத்தில் கட்டப்படவுள்ள வீடுகளுக்கு வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டும் இந்நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த வீடுகள் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் வீடற்ற ஏழைகள் மற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து குடிசை அமைத்து வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ளன என்றார்.

SCROLL FOR NEXT