திருவண்ணாமலை ரயில் நிலையம் (கோப்புப் படம்). 
தமிழகம்

தி.மலை - சென்னை இடையே ரயில் இயக்க நடவடிக்கை: பொதுமக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு செவி சாய்த்து, ரயிலை இயக்கக் கோரி இந்திய ரயில்வே வாரியத்துக்கு தென்னக ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

விழுப்புரம் - காட்பாடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதனால், திருவண்ணா மலை - தாம்பரம் (விழுப்புரம் வழியாக) இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில், கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டது. அகல ரயில் பாதை திட்டம் முடிவுற்ற பிறகு, தாம் பரத்துக்கு மீண்டும் ரயில் இயக் கப்படவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த திருவண்ணாமலை மாவட்ட மக்கள் மற்றும் வணிகர்கள், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண் டும் என வலியுறுத்தினர். பொது மக்களின் கோரிக்கைக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தின. கூட்டங்களை நடத்தி தீர்மானங் களை நிறைவேற்றி, ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரி யத்துக்கு மனுக்களை தொடர்ந்து அனுப்பினர். இருப்பினும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், திருவண் ணாமலை பவுர்ணமி கிரிவலத்துக்கு சென்னை கடற்கரை-வேலூர் இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில், திருவண்ணாமலை வரை நீட்டித்து சிறப்பு ரயிலாக இயக்கி வருகிறது. இந்த ரயில் சேவையை தினசரி தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து ரயில்வே வாரியத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனுக்கள் அனுப்பப்பட்டன.

அதன் அடிப்படையில், சென்னைக்கு மீண்டும் ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - வேலூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலை, திருவண்ணாமலை வரை இயக்க இந்திய ரயில்வே வாரியத்துக்கு தென்னக ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

திருச்சிக்கு பயணிக்கலாம்

இதேபோல், திருவண்ணா மலையில் இருந்து தென் மாவட் டங்களுக்கு ரயில் இயக்க வேண்டும் என்ற மாவட்ட மக்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது. திருச்சி - கடலூர் திருப்பாதிரிபுலியூர் (விருத்தாசலம், அரியலூர் வழியாக) இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில், வேலூர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், இந்திய ரயில்வே வாரியத்துக்கு தென்னக ரயில்வே பரிந்துரைத்துள்ளது.

தென்னக ரயில்வேயின் இரண்டு பரிந்துரைகளை, இந்திய ரயில்வே வாரியம் அங்கீகரித்தால், தி.மலை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறை வேறும். 2 புதிய ரயில்களுக்கான கால அட்டவனை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT