தமிழகம்

இந்தியாவில் 1947-க்கு பிறகு எத்தனை முறை பணத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது?- மத்திய நிதி அமைச்சகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

இந்தியாவில் 1947-க்கு பிறகு எத்தனை முறை பண மதிப்பு குறைப்பு செய்யப்பட்டது என்பதை மத்திய நிதியமைச்சகம் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழக காவல்துறையில் சார்பு ஆய்வாளர் நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜன.12ல் நடந்தது. முதலில் வெளியான விடை சுருக்கத்தின்படி எனக்கு 48.5 மதிப்பெண் கிடைத்தது. பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எனக்கு வேலை கிடைத்திருக்கும்.

இறுதியாக வெளியிடப்பட்ட விடைச்சுருக்கத்தில் 47-வது கேள்விக்கான விடை மாறியிருந்தது. இதனால் அரை மதிப்பெண் குறைந்ததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை.

கடந்த 1947-க்கு பிறகு இந்திய நாணயம் எத்தனை முறை மதிப்பு குறைக்கப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டது. இந்தியாவில் இந்திய நாணயம் 3 முறை மதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு 4 முறை செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பும், மதிப்பு குறைப்பும் வேறு வேறானது. இதனால் அந்த கேள்விக்கு 3 முறை என்பதே சரியான விடை. ஆனால் 4 முறை என பதிலளித்தவர்களுக்கு அரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. சரியாக விடையளித்த எனக்கு அரை மதிப்பெண் வழங்கி அடுத்தக்கட்ட தேர்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல், ராஜ்குமார் என்பவரும் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து, மதிப்பு குறைப்பும், மதிப்பிழப்பும் வேறு வேறானது. இதனால் சரியான வியைளித்த பலருக்கு மதிப்பெண் மறுக்கப்பட்டுள்ளது. தவறான விடைகளின் அடிப்படையில் வெளியான இரண்டாவது விசைச்சுருக்கம் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. மனுதாரர்கள் இருவரும் சரியான விடையளித்துள்ளதால் அவர்களுக்கு தலா அரை மதிப்பெண் வழங்கி அடுத்தக்கட்ட தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி 8 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தனர். அதில் தனி நீதிபதியின் உத்தரவால் எங்களுக்கு தலா அரை மதிப்பெண் குறைந்து, வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கில் மத்திய நிதி அமைச்சகத்தை நீதிமன்றமே தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. இந்தியாவில் 1947-க்கு பிறகு எத்தனை முறை பண மதிப்பு குறைப்பு செய்யப்பட்டது என்பதை மத்திய நிதி அமைச்சகம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT