தமிழகம்

சிவகங்கையில் ஓராண்டில் 59 குழந்தைகள் மீட்பு: 74 குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்-  மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் தகவல்

இ.ஜெகநாதன்

கடந்த ஓராண்டில் மட்டும் சிவகங்கை சைல்டுலைனுக்கு 445 புகார்கள் வந்துள்ளன. இதில் 74 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சிவகங்கையில் மாவட்ட சைல்டுலைன் சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி நண்பர்கள் வார விழா நடந்தது. மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சரளா தலைமையில் நடந்தது.

சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு வரவேற்றார். மாவட்ட சைல்டுலைன் இயக்குநர் ஜீவானந்தம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ரசீந்திரகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் சைல்டு லைன் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

விழாவிற்கு பிறகு மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சரளா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் சைல்டுலைன் செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சிவகங்கை சைல்டுலைனுக்கு 445 புகார்கள் வந்துள்ளன. இதில் 74 குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட 17 குழந்தைகள், காணாமல் போன 9 குழந்தைகள், வீட்டைவிட்டு வெளியேறிய 13 குழந்தைகள், பிச்சையெடுத்த 20 குழந்தைகள் என 59 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் குழந்தைகள் நலக்குழு மூலம் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர், என்று கூறினார்.

வார விழாவையொட்டி குழந்தைகளுக்கு ஓவிய போட்டி, பட்டிமன்றம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தொடர்ந்து நடைபெறும் என, சைல்டுலைன் இயக்குநர் ஜீவானந்தம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT