படம்: எல்.சீனிவாசன் 
தமிழகம்

கரோனா பேரிடரை மனதில் வைத்தே முதல்வர் அறிவிப்பு: பொங்கல் பரிசு குறித்து கோகுல இந்திரா விளக்கம்

செய்திப்பிரிவு

கரோனா பேரிடரை மனதில் வைத்தே பொங்கல் பரிசு குறித்து முதல்வர் அறிவித்துள்ளார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் கோகுல இந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டில் 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார். இதுதவிர பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுடன் துண்டுக் கரும்புக்குப் பதில் முழுக் கரும்பு வழங்கப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.

அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் நாளிலேயே, அரசுத் திட்டங்களை ஆளுங்கட்சியின் உதவித் திட்டமாகச் சித்தரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், ''ஆண்டுதோறும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது வழக்கமாக இருந்தது. கரோனா பேரிடர்க் காலத்தில் மக்கள் கடினமான சூழலில் உள்ளனர். இதை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்குத் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. பண உதவிகளும் அளிக்கப்பட்டன.

கரோனாவால் இடம்பெயர்ந்த மக்கள், வேலைவாய்ப்பை இழந்தோர் ஆகியோர் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கில், முதல்வர் சிந்தித்திருக்கிறார். அதற்காகவே இந்த மாதிரியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் பரிசு உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெரிய மனதுடன் தமிழக மக்களின் ஒவ்வொரு தேவைகளையும் கருத்தில் கொண்டு முதல்வர் அறிவித்துள்ளார். குறிப்பாக வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள் மற்றும் நடுத்தர மக்களுக்காக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்றென்றும் தமிழக மக்களுக்கு உறுதுணையாக முதல்வர் பழனிசாமி இருப்பார்’’ என்று கோகுல இந்திரா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT